மீன்பிடித் துறைக்கான உதவிகளால் வாழ்வாதாரம் அளிக்கப்படுகிறதா இல்லை அழிக்கப்படுகிறதா?
மீன்பிடி என்பது ஒரு வாழ்வாதாரம் என்று அனைவருக்கும் தெரியும். அந்த துறையில் வேலை என்பது அவர் மீன் பிடிப்பவராக, மீனை எடுத்து விற்பனை செய்பவராக, பெறுமதி சேர் உற்பத்தி செய்பவராக, பெரியளவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்பவராக இருக்கலாம். இங்கு மீன்பிடி வாழ்வாதாரம் பற்றிய இந்த விடயம் பாரிய மீன்பிடி வணிகத் துறையினையும் அதில் ஈடுபடுபவர்களையும் விலத்தி தமது வாழ்வுக்கான வருமான ஆதாரமாக சிறியளவில் மீன்பிடித் தொழில் செய்பவர்களையும் அவர்களது குடும்பங்களையுமே கருத்தில் கொண்டு முன்வைக்கப்படுகிறது.
பல்வேறுபட்ட மீன்கள் பல்வேறுபட்ட அளவுகளில் பல்வேறு காலநிலைகளில் கிடைக்கும். மன்னாரின் தென் கடற்கரை பிரதேசத்தில் பருவநிலை ஐப்பசி தொடக்கம் பங்குனி வரை அதிகளவிலும் வைகாசி வரை ஓரளவிலும் இருக்கும். காற்றுக் காலங்களில் மீன்பிடி அளவு குறைந்துவிடும். பருவமாற்ற காலங்களில் வேறு தொழில் ஒன்றை பார்க்க முடியாவிட்டால் சேமிப்புக்களும் இல்லாது விட்டால் கடனில் தான் அக்காலங்களை கழிக்க வேண்டும். பின்னர் தொழில் செய்யும் காலங்களில் கடனை அடைத்தால் சேமிப்பு இல்லை. இப்படி ஒரு வட்டம் சுற்றிக் கொண்டிருக்க மீன்பிடிக்கான முதலீடும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
ஒரு படகினை (ஒரு நாள் படகு) வாங்க ஒன்றரை இலட்சங்கள் தேவை. இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கு அதன் வலுக்களின் அளவை பொறுத்து விலை இரண்டரை இலட்சங்களில் இருந்து மூன்றரை இலட்சங்கள் வரை தேவைப்படும். அது தவிர வலைகளில் கூட பல்வேறு விதங்கள் உண்டு. ஒரு வலை என்பது உண்மையில் எட்டு முதல் பத்து வலைத்துண்டுகள் இணைக்கப்பட்ட தொடுப்பு ஆகும். அவ்வாறான ஒரு வலைக்கு கிட்டத்தட்ட ரூபா 40,000 – 50,000 தேவை. (ஒரு வலைத்துண்டு சராசரியாக 5000 ரூபாய்கள்). ஒரு வலையை மட்டும் வைத்து மீன்பிடியில் ஈடுபடுவது கடினம். குறைந்தது இரு வலைகள் தேவை. ஒருவர் ஒரு வலை மட்டுமே வைத்திருந்தால் இன்னொருவருடன் சேர்ந்து மீன்பிடித்து பங்கினை பிரித்துக்கொள்வார்கள். முன்னர் சொன்னது போல பருவநிலைக்கு ஏற்ப மீன் வகைகளும் மாறும், அதோடு எல்லா மீனினங்களும் ஒரே அளவானவை அல்ல. அதற்கேற்ப வலைகளின் துவாரங்கள் வித்தியாசப்படும். எனவே ஒரு மீனவர் தனி ஒரு வலையை நம்பி மட்டும் தனது வாழ்வாதாரத்தை நடத்திவிட கடினம். இரண்டு அல்லது மூன்று விதமான வலைகள் வைத்திருக்க வேண்டும். வலைகளை தயாரிக்க கயிறுகளும் அவசியம். நீள அளவீடுகள் நிலத்திலும் கடலிலும் மாறுபடுவதால் 100 மீற்றர் தூரத்திற்கு 150 மீற்றர் கயிறு தேவை என்று கருதுகிறார்கள். இறால்களை பிடிப்பதற்கென விசேடமாக சிலர் வலையை தயாரிப்பார்கள். அது ‘சுருக்கு’ வலை என அழைக்கப்படுகிறது. அதற்கு ரூபாய் 250,000 வரை செலவாகும்.
ஆழ்கடலில் 15 கிலோமீற்றர் தொடக்கம் 20 கிலோமீற்றர் வரை சென்று வருவார்கள். இயந்திரத்தின் பாவனை மிகச்சிறப்பாக 7 மாதங்கள் வரை இருக்கும். ஒன்றரை வருட காலம் வரை அதன் பாவனை செல்லும். பின்னர் பழுது பட ஆரம்பிக்கும். அதனை திருத்துதல் அல்லது பிரதியீடு செய்தலுக்கு குறித்த தொகை காலத்துக்கு காலம் தேவையாய் இருக்கும்.
சாதாரணமாக மீன்பிடித்தொழில் ஒன்றுக்கு முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 750,000 ரூபாய்கள் தேவைப்படுகிறது. இத்தகைய முதலீடு தேவைப்படுகிற இடத்தில் இடப்பெயர்வுகளை சந்தித்து மீள்குடியேறி இருக்கிற சாதாரணமான ஒரு மீனவர் குடும்பத்தினால் அந்த தொகையை ஈடுகட்ட எதுவிதமான வழிவகைகளும் இல்லை.
எதுவிதமான ஆதாரங்களும் இல்லாத குடும்பத்திற்கு அரச வங்கிகளிலும் கடனுதவிகள் குதிரைக்கொம்பாகத் தான் இருக்கிறது. வங்கிகளின் நடைமுறைகள், ஆவண தேவைப்பாடுகள் அரச வங்கி கடனை நாடாமல் தடுத்துவிடுகிறன. உயர்வட்டி என அறிந்தாலும் தேவையின் நிமித்தம் நிதி நிறுவனங்களிடமிருந்தோ அல்லது உள்ளூரில் /கிராமத்தில் கடன்வழங்கும் முக்கிய நபர்களிடமிருந்து கடனை பெற்று முதலீடு செய்கிற நிலைமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
கிராமங்களில் கடனுதவி வழங்கும் நபர்கள் பொதுவாக மீன்களை தொகையாக வாங்குபவர்களாகவோ அல்லது இடைத்தரகர்களாகவோ இருப்பார்கள். அவர்களிடம் கடன்படுவதில் கட்டுப்பாடுகளாக சில விடயங்கள் உண்டு. கடனை அடைக்கிற வரையில் படகோ இயந்திரமோ உரிமை கொண்டாடப்பட முடியாது. கடன் வாங்குபவர் தனது மீன்பிடியை (பிடிக்கிற மீன்களை) கடன் தந்தவரிடமே விற்க வேண்டும். அவரிடம் ஒரு தொழிலாளராக வேலை புரிய வேண்டும். வெளியாரிடம் விற்பதானால் கடன் பெறுமதியை ஒரே தரத்தில் அல்லது இரு தவணைகளில் கட்டி முடித்த செலுத்திவிட வேண்டும். மீன்களுக்கான பெறுமதி சந்தை விலையிலிருந்து போக்குவரத்துக்கான செலவு, இலாபத்தின் பங்கினை கழித்த பெறுமதியாக வழங்கப்படும். இயந்திரத்திற்கான எரிபொருள் ஒரு தடவைக்கு ரூபா 5,000 வரை. அன்றைய மீன்பிடி அந்த செலவையும் ஈடுகட்டுவதாக இருந்தால் மட்டுமே கடன் நிலைமைகளை சமாளிக்க முடியுமாய் இருக்கும்.
கடன் வழங்குவதில் தனியார் நிதி நிறுவனங்களின் நடைமுறைகளில் நெகிழ்வுத்தன்மை மற்றும் மிகக் குறைந்த ஆவணத்தேவைப்பாடுகள், உயர் வட்டி என தெரிந்தாலும் அங்கு கடன் பெறுவதை மக்கள் நாடுவதற்கு காரணமாகிறன. ‘கிழமை லோன்’ என்று சொல்லப்படும் இந்த நிதிக்கடன்கள் வாராவாரம் திருப்பிச்செலுத்தும் முறையை கொண்டிருக்கிறது. மேற்சொன்ன நாளாந்த நிலைமையை சமாளிக்க பிரயத்தனப்படும் குடும்பம் இந்த வாராந்த தவணையையும் எதிர்கொள்ளவே வேண்டும். அல்லது எந்த காரணத்துக்காக கடனை பெற்றாரோ அந்த முதல் பறிமுதலுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகும். இன்னும் சிலர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று சுழற்சி முறையில் கடன்களை வாங்கி தடுமாறுகிற சந்தர்ப்பங்களும் உண்டு.
கூடியளவில் இத்தகைய இடங்களில் பாரம்பரியமாக மீன்பிடியை தொழிலாக கொண்ட குடும்பத்தில் இருக்கிற இளைஞர்கள் (ஆண்கள்) குறிப்பிட்ட வயதின் பின்னர் பாரம்பரியமாக தொடர்ந்த தொழில் என்பதால் இந்தத் தொழிலுக்கே தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.[1] எனவே இந்த மீனவர் குடும்பங்கள் இன்னொரு விதத்தில் இந்த தொழில் போட்டிகளையும் சமாளிக்க வேண்டும்.
தாமே மீன்களை விநியோகம் செய்வது அல்லது ஏற்றுமதி செய்வது என்றால் அதற்கு மேலதிகமாக (வாகனம், குளிரூட்டல் வசதிகள் என்பவற்றிற்கு)முதலீடு தேவை. எனவே கிராமத்தில் அந்த வசதி இருப்பவரிடம் தங்கி இருக்க வேண்டிய நிலைமை பெரும்பாலான மீனவர்களுக்கு உண்டு. கூடுதலாக இந்த வசதி உள்ளவர்கள் தான் கடன்வழங்கும் நபர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் மீனினை உரிய பெறுமதிக்கு விற்க முடியாமல் நாளந்த செலவை மட்டும் ஈடு கட்ட போராடுவதால் கடன் அடைக்கப்படாமல் கட்டுப்பாடுகளில் இருந்தும் மீள முடியாமல் இந்த வட்டத்தை தாண்டி வர முடியாமலே பல மீனவர்களின் வாழ்வாதாரம் சுழன்று கொண்டிருக்கிறது.
இடப்பெயர்வுகளை சந்தித்த குடும்பங்களின் தேவையாக இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை சேவைகளை வழங்குவதில் பல்வேறு துறையினரும் ஆர்வம் காட்டி வருகிறனர். உதவிகளை வழங்கிவிட்டு அதனை மேற்கொண்டு நடத்தாவிட்டால் வேறு உதவிகள் கிடைக்கப்பெறாது என்கிற கொள்கையில் நிறுவனங்களும் அரசாங்கமும் திடமாக இருக்கிறது. ஆனால் மீள்குடியேற்றங்களின் போது இத் துறையினரால் வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளில் பயனாளிகள் தொடர்பில் சிறப்பான கவனம் செலுத்தப்படுகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியுள்ளது. ஏனெனில் அனர்த்தங்களின் போது வெறுமனே தமது பொருளாதார முதலை மட்டும் அன்றி தொழில் பற்றிய போதிய அறிவு, தொழிற் திறனுள்ள அங்கத்தவரின் இழப்பு அல்லது இயலாமை போன்ற மனித முதலீடுகளையும் சந்தைக் கட்டமைப்பு, தொடர்புகள் போன்ற சமூக முதலீடுகளையும் சேர்ந்தே இழப்புக்கு உள்ளகிறனர். அவற்றை ஈடுகட்டும் வகையில் உரிய ஏற்பாடுகளுடன் இவ் உதவிகள் இருக்க வேண்டும். அத்தோடு உரிய வாழ்வாதாரத்துக்குரிய உதவிகள் உரிய பயனாளியை சென்றடைவதையும் உறுதிப்படுத்துதல் அவசியமானதாக இருக்கிறது.
இதில் வாழ்வாதார உதவித் தொகையாக வழங்கப்படுகிற தொகை ரூபா 25,000 தொடக்கம் ரூபா 50,000 வரையாகும்.[2] அதற்கு மேலான பெறுமதியான உதவிகள் பயன்பெறுனர் பங்களிப்பையும் குறிப்பிட்ட சதவீதம் எதிர்பார்க்கிறன. இந்த முதலீடு ஒரு மீன்பிடியை ஆதாரமாக கொண்ட குடும்பத்திற்கு போதுமா? இயந்திரத்தை வாடகைக்கு எடுத்தால் கூட படகுக்கும் இன்னொரு வலைக்கும் என்றாலும் குறைந்த பட்சம் 200,000 ரூபாய்கள் மேலதிகமாக முதலீட்டுக்கு கடனாளியாக்கும் இந்த உதவிகள் மூலம் வாழ்வின் ஆதாரம் அளிக்கப்படுகிறதா இல்லை அழிக்கப்படுகிறதா?
ஆதாரம் அளிக்கப்பட வேண்டுமென்றால் மேற்சொன்ன நிலைமைகளை கருத்தில் கொண்டு வாழ்வாதாரம் மற்றும் அதற்கான கடன்வசதிகள் தொடர்பில் ஏனைய பங்குதாரர்களுடன் இணைந்து உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் மாற்றங்களை கொண்டுவரக் கூடிய முடிவெடுக்கவும் வேண்டிய பொறுப்பு தீர்மானம் எடுப்பவர்களிடமே முற்றுமுழுதாக சார்ந்திருக்கிறது.
[1] வேறு பகுதிகளில் சமூகத்தின் அந்தஸ்து பிரிவினைகள் காரணமாக இளைஞர்கள் பாரம்பரியமாக இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட விரும்பாத நிலை அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கிற போதிலும் இப்பகுதியில் பொதுவாக உயர்தரம் வரை படித்த பின்னர் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகாத சூழ்நிலையில் வேறு வேலைகளை நாடுவதை விட இந்த தொழிலை இங்குள்ள இளைஞர்கள் நாடுகிறார்கள்.
[2] நீண்டகால நோக்கில் பெரிய தொகையை ஒரு சில நிறுவனங்கள் வழங்குகிறன. அவை சுழற்சி முறைக் கடன் முறையாகவோ அல்லது இணைந்த உதவியாகவோ (2 அல்லது 3 குடும்பங்களுக்கு) காணப்படுகிறது. உதவித்தொகை கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் பல குடும்பங்களை இணைத்து (4 அல்லது 5 பேர் கொண்ட குழு) உதவி வழங்கும் நிலைமை பொதுவாக காணப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கே அதிக நிதியை உதவும் பட்சத்தில் பயன்பெறும் மக்களின்/ குடும்பங்களின் எண்ணிக்கை குறைவடைந்துவிடும் என்பதும் கவனிக்கப்படும் விடயமாக இருக்கிறது.