+ 94 11 2504010
info@cepa.lk

யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்திற்கான புலம்பெயர் இலங்கைச் சமூகம்

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையானது பொருளாதார அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானம் ஆகிய மூன்று சவால்களை எதிர்கொண்டது. 2015 இல், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி மற்றும் சமாதானத்தை உணர்ந்து அதற்கான ஒரு பங்களிப்பாளராக இலங்கையின் புலம்பெயர்ந்தோரை அழைத்தது. இருப்பினும், யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையுடன் இணைந்து ஈடுபடுவதற்கான புலம்பெயர்ந்தோரின் எதிர்ப்பார்ப்பு மற்றும் ஊக்குவிப்பு பற்றிய விரிவான மற்றும் திட்டமிட்ட புரிந்துணர்வு பற்றாக்குறையாக காணப்படுகின்றது. அத்தோடு இலங்கை அரசு வெளிப்படுத்திய ஆரம்பகட்ட உற்சாகமானது ஒரு ஒத்திசைவான மற்றும் அர்த்தமுள்ள மூலோபாயமாக மாற்றப்பட வேண்டும். இதன் பின்னணியில் ‘ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை நோக்கிய வேலைத்திட்டம்: யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான இலங்கையின் புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியான தனியார் துறைகளுடன் இணைந்து ஈடுபடுவதற்கான புதிய வடிவங்கள்’ எனும் மூன்று வருட ஆராய்ச்சி திட்டமொன்றினை வறுமை ஆராய்ச்சி நிலையமானது (Centre for Poverty Analysis) மேற்கொண்டது. a) யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பல்வேறு பங்காளர்களால் இலங்கையின் புலம்பெயர்ந்தோருக்கென ஒதுக்கப்பட்டுள்ள புதிய அர்த்தங்கள் மற்றும் பொறுப்புகள், b) இலங்கையுடன் இணைந்து ஈடுபடுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான அடிப்படை உந்துதல்கள் மற்றும் c) இலங்கை அரசிற்கும் பல்வேறு புலம்பெயர்ந்தோர் குழுக்களுக்கும் இடையிலான ஒரு பயனுள்ள பங்களிப்பை உணர்ந்துகொள்வதில் உள்ள முக்கிய விடயங்கள் போன்றவற்றினை புரிந்துகொள்வதே இதன் நோக்கமாக இருந்தது. புலம்பெயர்ந்தோர் தொடர்பாக அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை பெரும்பாலும் ஒரு தலையானது என்பதே இதன் பொதுவான கண்டறிவாகும். யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி மற்றும் சமாதானம் போன்ற செயற்பட்டியலில், புலம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் ஒரு புதிய பங்கினை வழங்கியுள்ளது. சிங்கள ஊடகங்களின் தமிழ் புலம்பெயர்ந்தோர் தொடர்பான எதிர்மறையான சித்தரிப்பானது, யுத்தத்திற்கு பின்னரான பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிலையான சமாதானத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதார பங்காளியாக தமிழ் புலம்பெயர்ந்தோரை ஈடுபடுத்துகின்ற மற்றும் மீளவரையறை செய்கின்ற அரசாங்கத்தின் செயற்பட்டியலை உணர்த்துவதற்கு தடையாக உள்ளது. இருப்பினும், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திற்கு முதலீட்டாளர்களாக இருக்கக்கூடிய சில புலம்பெயர்ந்தோர்களின் ஆர்வமானது அரசாங்கத்தின் சரியான கவனத்தினைப் பெறவில்லை. யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்திற்கான ஒரு பயனுள்ள பங்காளியாக இலங்கை புலம்பெயர்ந்தோருடன் இணைந்து ஈடுபடுவதற்கான ஒரு வெற்றிகரமான மூலோபாயம் தற்போதுள்ளதைவிட மிக அதிகமாக இருக்க வேண்டும். இத்தகைய மூலோபாயமானது கவனமாக வடிவமைக்கப்பட்ட, முரண்பாட்டிற்கான உணர்திறன் கொண்ட, தேசிய, பிராந்திய மற்றும் மாவட்ட மட்டத்தினை ஒருங்கிணைக்கின்ற கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களின் ஒருங்கிணைந்த மற்றும் விரிவான தொகுப்பு போன்றவற்றினை உள்ளடக்கியிருக்க வேண்டும். புலம்பெயர்ந்தோருக்கு கவர்ச்சிகரமான முதலீட்டுச் சூழலினை உருவாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிராந்திய மற்றும் மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தி திட்டங்களை வழங்கக்கூடிய பல்வேறு புலம்பெயர் குழுக்களின் பல திறமைகளை (நிதிக்கு அப்பாற்பட்டவை) மெதுவாக தட்டிக்கொடுக்க வேண்டும். பிரதான ஆராய்ச்சி திட்டத்தின் பகுதியாக ஐந்து விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஐந்து தனிப்பட்ட ஆய்வுகள் குறித்து இக்கொள்கைச் சுருக்கமானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களிலுள்ள கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும் அறிவிப்பதற்கும் ஒவ்வொரு ஆய்விலிருந்தும் பெறப்பட்ட பரிந்துரைகளின் ஐந்து தனிப்பட்ட தொகுப்புகளை இது வழங்குகின்றது.